பக்கம் எண் :

சிவை என்பதற்குத் திருவருள் சத்தி என்ற பொருளும் உண்டு “ அருளது சத்தியாகும்” என்று வருதல் காண்க.  அத்திருவருள் சத்தி “உலகெலாம்” என்ற சொல்லைக் கொடுக்கப் பெற்ற சேவையர் குலாதிபன் எனச் சேக்கிழார்மீது ஏற்றிக் கூறினும் அமையும்.                                    (100)

 

10.  பண்புகெழு நின்சரித் திரம்இனிய பாவால்

        பரப்பிய திருக்கை லாய

     பரம்பரை உமாபதி சிவன்புகழும், அவன்முனோர்

        பைம்புகழும் அவன் வழிவரும்

     நண்புபுனை தவர்புகழும் இனிமேலும் வருபவர்

        நயப்புகழும் நீடு வாழ

     நாடுவித நீசெய்த மாபுரா ணத்தமரும்

        நாயன்மார் பெருமை வாழ

     விண்புகழும் நால்வர்திரு வாய்மலர்ந் தருள்திரா

        விடவேதம் என்றும் வாழ

     மெய்யன்பின் நின்ஆ லயப்பணி முதல்புரி

        விருப்பம்மிக் கார்கள் வாழத்

     திண்புவி எடுத்தேத்து சேவையர் குலாதிபன்

        சிறுதேர் உருட்டி யருளே

     சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினோன்

        சிறுதேர் உருட்டி யருளே.

 

   [அ. சொ.]  பண்பு-நற்குண நற்செய்கை, கெழு-மிக்கு, முனோர்-முன்னோர்கள், பைம்புகழ்-என்றும் அழியாத புகழ், நால்வர்-அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திராவிட வேதம்-தமிழ் வேதமாகிய தேவார திருவாசகம், பணி - தொண்டு, புவி - பூமியில் உள்ள மக்கள், ஏத்தும் - போற்றும், மா புராணம் - பெரிய புராணம், நாயன்மார்-அறுபான், மும்மை நாயன்மார்களும் தொகையடியார்களும்.