1

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

    ஈடும் எடுப்பும் அற்ற இன்தமிழ் மொழியில் தொண்ணுற்றாறு வகை பிரபந்தங்கள் என்று கூறப்படும் மரபு ஒன்று காணப்படுகின்றது. இப்பிரபந்தங்களுக்குள் அடங்குவன பிள்ளைத்தமிழ், உலா, அந்தாதி, கலம்பகம், மாலை, கோவை, பரணி, குறவஞ்சி, பள்ளு, தூது முதலியன. அவற்றைச் சிற்றிலக்கியங்கள் என்றும் பிற்கால இலக்கியங்கள் என்றும் ஒருசிலர் கருதுவர். இந்நூல்களுள் கோவை, பரணி போன்ற, பிரபந்தங்கள், நானூறு, நானூற்றுக்கு மேல் ஆயிரத்திற்குள் அமைந்த பாடல்களைக் கொண்டும், ஏனையவை மேலே கூறிய பாடல் தொகைக்குள் அடங்குவனாவாகவும் இருத்தலின், இவற்றைச் சிற்றிலக்கியம் என ஒருவாறு கூறலாம். ஆனால், இப்பிரபந்தங்கள் பிற்கால இலக்கியங்கள் என்று கூறமுடியாது. தொல்காப்பியர் காலத்துக்கு முன்பும் இத்தகைய இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்று கருதவேண்டி இருக்கிறது, தொல்காப்பியம், இலக்கியங் கண்டவற்றிற்கே இலக்கணம் வகுத்துக் கூறும் நூல். 

   தொல்காப்பியம் இப்பிரபந்தங்கட்கு இலக்கண விதியாக மூன்று நூற்பாக்களைக் கூறியுள்ளார். அவையே,

           “குழவி மருங்கினும் கிழவ தாகும்”

           “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப

           “விருந்தே தானும்

           புதுவது கிளந்த யாப்பின் மேற்றே.”  என்பன.

    இந்நூற்பாக்களுக்குரிய உரைகளையும் விளக்கங்களையும் காணும்போது சிற்றிலக்கியங்கள் இருந்தன என்பது, தெள்ளத் தெளியவரும். முதல் சூத்திரத்திற்கு உரைகண்ட உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்,