New Page 1

2

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

“ பக்குநின்ற காமம், ஊரில் பொது மகளிரொடு கூடி வந்த விளக்கமும், பாடாண்திணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் “  என்று உரை எழுதி, விளக்கம் கூறவந்த இடத்து,  “ தோற்றமும் என்றது, அக்காமம் தேவரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் விளக்கத்தை, அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம் “  என்று விளக்கியுள்ளனர்.

 

   இச்சூத்திரத்திற்கே உரைகண்ட உளம்கூர் கேள்வி இளம்பூரணர்,  “ ஊரின்கண் தோற்றமாகக் காமப் பகுதி நிகழ்தலும் உரித்து என்று சொல்லுவர் புலவர் “  என்று கூறி, விளக்கம் எழுது மிடத்து,  “ ஊரொடு தோற்றம் என்பது, பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக வருவது. வழக்கு என்பது அவரவர் பருவத்திற்கு ஏற்பக் கூறும் வகைச் செய்யுள் “  என்று விளக்கினர். இச்சூத்திரத்தின் மூலமும், உரை விளக்கங்களின் மூலமும் உலா என்னும் பிரபந்தம் பண்டே உண்டு என்பதையும் பாடுதற்குரிய முறைகளையும் அறிகிறோம். 

 

   அடுத்து வரும் நூற்பா, எல்லா வகைப் பிரபந்தங்கட்கும் பொது விதியாக அமைந்த நூற்பா ஆகும். இச்சூத்திரத்திற்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்,  “ விருந்து தானும் புதிதாகத் தொடுக்கப்படும் தொடர் நிலை மேற்று“ என்று எழுதியுள்ளனர். விளக்கம் தரும்போது,  “ புதுவது கிளந்த யாப்பின் மேற்று என்றது என்னை எனில், புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்து வரச் செய்வது. இது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் எனவுணர்க. கலம்பகம் முதலாயினவும் சொல்லுப “  என்று விளக்கம் தந்தனர்.

 

   மூன்றாவதாக உள்ள நூற்பா, பிள்ளைத் தமிழ்க்குரிய இலக்கணம் கூறும் நூற்பா ஆகும். இதற்கு உரைகண்ட இளம்பூரணர் குழவிப் பருவத்தும் காமப்பகுதி கூறப்பெறும்