1

இராமநாடக நூலாசிரியர் வரலாறு
 

சோழ நாட்டின்கண் ஞானத்தின் திருவுருவாகவும் கானத்தின்
ஏழுபிறப்பாகவும் வந்த திருஞானசம்பந்தப்பெருமான் தோன்றிய
சீர்காழிப்பதியின் பால்உள்ள தில்லையாடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த
வேளாளர் குடிப்பெருமகனார் நல்லதம்பிப் பிள்ளைக்கும் அவர்தம் அருமை
மனைவி வள்ளியம்மைக்கும் தமிழும் இசையும் செய்ததவப் பயனாய்
அவர்களுக்கு நான்காவது திருமகனாகத் தோன்றியவர் அருணாசலக்கவிராயர்.

இவர் சாலிவாகனசகம் 1634 விஜய ஆண்டு (கி.பி. 1711) பிறந்தார்.
இவருடைய முன்னோர் சைனசமயத்திலிருந்து சைவசமயத்தைத் தழுவியவர்
என்பர், இவர் குலமரபின்படி ஐந்தாவது வயதில் அக்கால முறைப்படி
நிகழ்ந்துவந்த பள்ளியில் கல்விகற்க அமர்த்தப்பட்டார். பொதுவான கல்வியை
இவர் பயின்று வருங்கால் இவரது பன்னிரண்டாம் வயதில் தாயார் முன்னரும்
தந்தையார் பின்னருமாக இவ்வுலக வாழ்வை நீத்து இறைவனடி சார்ந்தனர்.
பின்னர்த் தனது தமையன்மார்களது பராமரிப்பில் இவர் வளர்ந்து வரலானார்.
திண்ணைப்பள்ளிக் கல்வியை ஓரளவு கற்றபின் தனது தமையன்மார்
ஆதரவோடு தருமபுர ஆதினத்திற்குச் சென்று அவ்வாதீனத் திருந்த
கல்விமான்களை அடுத்து உயர்கல்வி பயின்று வரலானார். தமிழ் நூல்களைப்
பயிலும் பொழுதே தெலுங்கும் வடமொழியும் வல்ல ஆதீன முனிவர்களிடம்
தெலுங்கும், வடமொழியும் கற்றுவரலானார். அக்காலை அங்கிருந்து கல்வி
பயிற்றியவருள் குறிப்பிடத்தக்கவர் அம்பலவாணக் கவிராயர் என்பராவார்
பின்னர்த் தனது பத்தொன்பதாவது வயதுமுதல் திருமுறையும், சாத்திரமும்
இலக்கண இலக்கியங்களும் சிறப்பாகக் கற்று வரலானார். இவருடைய
கல்விவேட்கையையும் அறிவாற்றலையும் கண்டு மகிழ்ந்த அவ்
ஆதீனத்தலைவர் பண்டாரசந்நிதி அவர்கள் இவரைத் துறவு பூணச் செய்து
மடத்தின் தலைவராகச் செய்ய விரும்பினார். அவர்தம் விருப்பத்தை இவரிடம்
தெரிவித்த போது இவர் திருக்குறள், பெரியபுராணம், இராமாயணம் முதலிய
அருளாளர் நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்தமையான் அச்சான்றோர்கள்
இல்லறம்பூண்டு உலகியல் கடன்களை ஆற்றிய பின்னரே துறவு
மேற்கொள்ளக் கூறியுள்ளமையை எண்ணிப் பண்டாரசந்நிதியிடம் மிகப்
பணிவோடு தன்கருத்தை விளக்கினார். பண்டார சந்நிதிகள் மேலும்
வற்புறுத்தாமல் அவர் விரும்பியபடி இல்லறத்தை ஏற்க அருளி
வாழ்த்தியனுப்பினார். எனினும் உடனே திருமணம் செய்துகொள்ள
விழையாமல் தொடர்ந்து தமிழ்நூல்களைப் பயின்று பெரும் புலமையும்
கவிபுனையும் ஆற்றலும்கைவரப்பெற்றார்.

பின்னர்த் தனது முப்பதாவது வயதில் கருப்பூரில் வாழ்ந்த தன் குலத்தார்
ஒருவர்தம் திருமகளைமணந்து கொண்டு தில்லையாடியிலே தங்கி இல்லறம்
நடத்தி வந்தார். குடும்பத்தைப் பேணுதற்குரியபொருளை ஈட்டு முகத்தான்
பொன் வாணிகம் செய்ய எண்ணி ஒரு காசுக் கடையைத் தொடங்கி நடத்தி
வந்தார். வாணிகத்தில் ஈடுபட்டிருப்பினும் தமிழ் வேட்கை மிகுதியினால்
சைவநூல்களைக் கற்றுத்தேர்ந்தமை போலவே வைணவ நூல்களையும் கற்க
விரும்பி ஆழ்வாராதிகளின் அருளிச் செயல்களாகிய திவ்யப்பிரந்தங்களையும்
பிற வைணவ நூல்களையும் கம்பராமாயணத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
அவற்றுள் திருக்குறளும் கம்பராமாயணமும் இவருடைய உள்ளத்தை மிகவும்
கவர்ந்தன.