| இணைப்பு |
| பின்கிடைத்த வேறு படிகளில் காணப்பெறும் பாடல்கள் |
| பாயிரம் |
| பாட்டறு நூறும் பகர்ந்தேன் எனக்கே |
537 | தனக்குத்தா னொருவன் போதம் சாற்றிடிற் குறைபி றர்க்கென் எனக்கவிர் நீதி நூனாற் பத்துநான் கதிகா ரங்கள் இனக்கவி யறுநூ றாய இனையநூ லயலார்க் கன்றென் மனக்கியான் உணர்த்து கின்றேன் மற்றெனை முனிவர் யாரே. |
|
| ஒருவன் தானே திருந்தி நன்னெறிச் செல்லவேண்டும். அதன் பொருட்டுத் தனக்குத்தானே அறிவு கூறிக்கொள்கிறான்; அதனால், பிறர்க்கு உண்டாகும் குறைவு ஒன்றுமின்று. அதுபோல், என் அகவிருள் அகன்று அறிவொளி விளங்குதற்குப் படலம் (அதிகாரம்) நாற்பத்துநான்கும், செய்யுள் அறுநூறும் சேர்ந்த இந் நீதிநூலைக் கூறினேன். அயலவர் பொருட்டு அன்று இந் நூல்; அதனால், என்னை முனிபவர் ஒருவரும் இலர். |
| போதம்-அறிவு. அவிர்-விளக்கம். |
| 1 |
| இருள்வேட்டு வெண்மையை ஏசலென் பாற்சினம் |
538 | மண்கவி மாந்தர் யாரு மறைவின்றி யுணரும் வண்ணம் வெண்கவி புனைந்தே னென்னை வெகுளுத லிருளை வேட்டு விண்கவி மதியைப் பாலை வெள்ளியை வெண்ப டாத்தைக் கண்கவி வயிர முத்தைக் கவுரமென் றுடற்றல் போலும். |
|
| நிலவுலகத்துச் சூழ்ந்து வாழும் மக்கள் எல்லாரும் வெளிப்படையாக உணரும்படி இந் நீதி நூலை எளிய செய்யுட்களால் பாடினேன.் அதனால், என்னை யாரும் வெகுளார் |