பக்கம் எண் :

228சித்தர் பாடல்கள்

5. அகப்பேய்ச் சித்தர் பாடல்

     மனமாகிய பேயை  வென்ற சித்தர் ஆதலின்  இவர் அகப்பேய் சித்தர்
என்றழைக்கப்படுகின்றார்.  அகம் + பேய் + சித்தர்.  இந்த அகப்பேய் சித்தர்
பெயர் காலத்தால் சிதைவுற்று ‘அகப்பைச் சித்தர்’ எனவும் கூறுவதுண்டு.

     நாயனார் குலத்தைச் சேர்ந்த இவர் இளமையில் துணி வணிகம் செய்து
வாழ்க்கை      நடத்தினார்.      வணிகத்தின்     பொருட்டுத்     தாம்
செல்லுமிடங்களிலெல்லாம்   பலதரப்பட்ட   மனிதர்களைச்  சந்திக்கின்றார்.
மேலுக்கு  மகிழ்ச்சியான  வாழ்க்கையை  வாழ்வதாகச்  சொல்லிக்கொள்ளும்
அவர்கள் உண்மையில் மனதிற்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.

     அவர்களின்   துன்பத்திற்குக்   காரணம்   என்ன  என்று  யோசிக்க
ஆரம்பித்தார். தன்னலம் கருதாது பிறர் நலன் குறித்துக் கவலைப்படும் அந்த
நல்லவருக்கு ஒரு போதி மரத்தடியில் (ஜோதி மரத்தடியில்) ஞானம் பிறந்தது.
ஆசையே  துன்பத்திற்குக்  காரணம்.  ஆசையை  வென்றால் இன்பமயமான
நித்திய  வாழ்வு வாழலாம் என்று கண்டுகொண்டார். மனமாகிய அகப்பேயை
அடக்கி   வெற்றி   கண்டார்க்கு  சிவமாகிய  இறைவன்  காட்சி  தருவார்.
துன்பமில்லா   இன்பநிலையை   அடையலாம்  என்ற  உண்மையைத்  தம்
பாடல்களில் பாடி வைத்தார்.