பக்கம் எண் :

26சித்தர் பாடல்கள்

நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே.
39
  
               சரியை நிலை

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே.
40
  
வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில்எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.
41
  
ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந் திரங்கள்எச்சில்
மோதகங்க ளானதுஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்
மாதிருந்த விந்தும்எச்சில் மதியும்எச்சில் ஒளியும்எச்சில்
ஏதில்எச்சில் இல்லதில்லை யில்லையில்லை யில்லையே.
42
  
               உற்பத்தி

பிறப்பதற்கு முன்னெலாம் இருக்குமாற தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாற தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.
43
  
               ஞானம்

அம்பலத்தை அம்புகொண்டுஅசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ
செம்பொன்அம்ப லத்துளே தெளிந்ததே சிவாயமே.
44
  
                கடவுள் நிலை

சித்தமேது சிந்தையேது சிவனேது சித்தரே
சத்தியேது சம்புவேது சாதிபேதம் அற்றது