பக்கம் எண் :

346சித்தர் பாடல்கள்

10. கொங்கணச் சித்தர் பாடல்

     எழில் கொஞ்சும் கேரள நாட்டில் கொங்கண தேசத்தில் சித்திரை மாத
உத்திர  நட்சத்திரத்தில்  புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார். நாளொரு
மேனியும்  பொழுதொரு  வண்ணமுமாக  வளர்ந்த  குழந்தையின்  மனதில்
அம்பிகையின் அருள் நினைவே நிறைந்திருந்தது.

     மாபெரும் சித்தராம் போகரைத் தரிசித்த கொங்கணர் அவர் கால்களில்
விழுந்து  வணங்கினார். போகர் அம்பிகையை வழிபடும் முறையையும் உரிய
மந்திரத்தையும் உபதேசித்தார்.

     அதன்பின் திருமூலர்  போன்ற பல சித்தர்களைத் தரிசித்துப் பல்வேறு
சித்திகள் கைவரப் பெற்றார் கொங்கணர்.

     ஒருசமயம்  இவர்  நிஷ்டையில் இருந்தபோது இவர்மீது கொக்கொன்று
எச்சமிட்டது.  கோபத்தில்  தலைநிமிர்ந்து  கொக்கை  விழித்துப்  பார்த்தார்.
கொக்கு எரிந்து சாம்பலானது.

     திருமூலரைப்  போன்றே  கொங்கணவரும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்
என கருவூரார் வாதகாவியம் தெரிவிக்கின்றது.

     பல நூறு சீடர்களுக்கும் யோக ஞான சித்திகளை அருளிய கொங்கணர்
இறுதியில் திருப்பதியில் சித்தி அடைந்தார்.