போமடா முன்சொன்ன நரம்பி னூடே பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும் ஆமடா பின்னியுங் கீழே பாயும் அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும் நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம் நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே. | 12 |
| | |
பாரான சாகரமே அண்ட வுச்சி பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ் சித்தான சித்துவிளை யாடிநிற்கும். வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ? விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ? கூறாத அட்சரத்தின் குறியைக் காணே. | 13 |
| | |
காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ? தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச் சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு; கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா! குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே. | 14 |
| | |
முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா! புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற் பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை; எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே. | 15 |