பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்465


விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
     வேகாத தலையாகும் விரும்பிப் பாரு
மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு
     மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்;
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
     அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
     கபடமற்ற தேகமடா கண்டு பாரே.
28
  
கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக்
     கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும்
தண்டுமுண்டு செய்யாதே மனம்வே றானால்
     தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய்
தொண்டுசெய்து பெரியோரை யடுத்து மைந்தா
     தொழுதுநீ யென்னூலை யன்பாய்க் கேளு
விண்டுமவர் சொலாவிட்டா லிந்நூல் சொல்லும்
     வெற்றிபெற மனவடக்கம் வைத்துப் பாரே.
29
  
பாரப்பா விஞ்சைமந்த்ரம் என்பார் வீணர்
     பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா!
ஆரப்பா சென்றேறிப் பார்க்கும்போது
     அதீதமுள்ள விஞ்சைமந்த்ரம் அனந்தங் காட்டும்;
நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள்
     நிமிடத்திற் செய்திடுவாய் நிலையைக் கண்டால்
வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும்
     வேறில்லாக் கனிதனையு முண்க லாமே.
30
  
உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே
     உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந்
திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி
     தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா!
தங்கலாந் தேகமது அறியா மற்றான்
     சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே
பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே
     பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே.
31