பக்கம் எண் :

464சித்தர் பாடல்கள்

தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்
     தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும்
ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்
     உதயகிரி பாராத வுலுத்த மாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
     வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக்
கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்
     கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே.
24
  
பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப்
     பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை
ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும்
     அடயோக மென்பார்க ளாகா தப்பா!
சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே
     சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும்
வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது
     வெட்டாத சக்கரத்தை யறிய லாமே.
25
  
அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
     அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
     பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
     விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
     கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே.
26
  
தாமென்ற உலகத்தில் மனித ரோடே
     சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
     ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
     ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே
காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே
     காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே.
27