பக்கம் எண் :

556சித்தர் பாடல்கள்

27. புண்ணாக்குச் சித்தர் பாடல்

     இவரைப் பிண்ணாக்கீசர் என்றும் குறிப்பிடுவர். பாம்பாட்டிச் சித்தரின்
சீடரான  இவர்,  கன்னடத்துக்காரர்  எனப் போகர்  குறிப்பிடுகின்றார். ஓர்
ஆத்தி  மரமே  இவரின் வசிப்பிடமாக இருந்தது என்றும், தீவிர  வைணவ
பக்தர்  என்றும்  கூறுவர்.  இவருக்குப் பசி  எடுத்தால் ‘கோபாலா’ என்று
அழுவாராம்.  மற்றபடி  மௌனம்தான்.  தாம் அடைக்கலமாயிருந்த ஆத்தி
மரத்திலேயே  சமாதியானதாகக்  கூறப்படுகிறது. இவருக்குப் பிண்ணாக்கீசர்
அல்லது   புண்ணாக்குச்  சித்தர்  என்று  பெயர்  வந்ததற்கான  காரணம்
புலப்படவில்லை.

    இவரது பாடல்கள்  ஞானம்மா என்பவரை முன்னிறுத்திப்பாடப்பட்டவை.
இவர்   இப்படி  முன்னிறுத்திய   ஞானம்மா  யாரென்பதைத்  தம்  முதல்
பாட்டிலேயே தெரிவிக்கின்றார்.

‘தேவி மனோன்மணியாள் திருப்பாதங்
காணவென்று தவித்திருந்தேனே’

என்று  கூறுவதன் மூலம் மனோண்மணியம்மையை  இவர் ஞானம்மா என்று
குறிப்பிடுவது புலனாகிறது.

    அஞ்ஞானத்தைக் கடந்து அறிவை மிகச் செலுத்தி மெய்ஞ்ஞானம் கண்டு
கொண்டால் அதுதான் விலையில்லாத ரத்தினமாகும் என்று கூறுகின்றார்.