பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 1

இரவெனுந் தாய் !

உலகை அணைத்திட வந்த இரவு கண்டேன்!
உவப்புற்றேன்! ஓய்வின்றி உழைத்து ழைத்தே
பலகை போல் தேய்ந்திட்டோர் உளத்தி லின்பம்
பாய்ச்ச வருந் தாய்அவளைப் போற்று கின்றேன்
சலசலப்புக் காரரெலாம் ஒடுங்கி மூலை
தனில் முடங்கிக் கிடக்கின்றார்! அமைதியெங்கும்
நிலவும் நிலை காண்கின்றேன்! இருள்வி ரிப்பால்
நீணிலத்தில் இன்பந்தான் விரிதல் கண்டேன்!

கொதிப்புற்ற உளங்குளிரப் பெற்றேன் - ஓட்டைக்
குடிசையுளே மெய்மறந் துறங்கு கின்ற
கதியற்ற மக்களைநான் எண்ணும் போதில்
கனிஇரவைப் போற்றுகிறேன் கருணை-யில்லார்
மிதிக்கின்றார் ஏழைகளை; இரவெ னுந்தாய்
மீட்சிதந் தாள்ஏழை மக்க ளுக்கே!
பொதிகையிலே நமைத்தள்ளித் தூக்கம் என்னும்
புத்தமுதப் பால்சுரந்து பருக வைத்தாள்!

நெடுந்தறியோ டாலையிலே உழன்றோர் தாமும்
நெருப்புருவாய் உலையருகே யிருந்தோர் தாமும்
கொடுந்துன்பச் சேற்றினிலே உழன்றோர் தாமும்
கொளுத்து வெயி லில்வாடிக் கிடந்தோர் தாமும்
படுந்துயரம் போதும்எனக் கதறும் போதில்
பறந்தோடி வந்தாய்நீ இரவே! அன்னோர்
கடுந்துயரம் நீக்கினாய் வறண்ட நெஞ்சில்
கனிநீரைப் பாய்ச்சினாய்! வாழ்க நீயே!

"பிரசண்டவிகடன்" 1945