மீன்கள்
வான்கடல் தோன்றிடும்
முத்துக்களோ-ஏழை
வாழும் குடிசையின் பொத்தல்களோ?
மாநில மீதில் உழைப்ப வர்கள்-உடல்
வாய்ந்த தழும்புக ளோஅவைகள்?
செந்தமிழ் நாட்டினர் கண்களெல்லாம்-அங்குச்
சேர்ந்து துடித்துக் கிடந்தனவோ?
சொந்த உரிமை இழந்திருக்கும்-பெண்கள்
சோக உணர்ச்சிச் சிதறல்களோ?
இரவெனும் வறுமையின் கந்தல்உடை-தனில்
எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?
அருந்தக்கூ ழின்றியே வாடுபவர்-கண்ணீர்
அருவித் துளிகளோ வான்குன்றிலே?
காலம் எழுதும் எழுத்துக்களோ-பிச்சைக்
காரர் இதயத்தின் விம்மல்களோ?
நீலக் கண்ணாடியின் கோட்டையிலே-மின்னல்
நெளிவை இறைத்திட்ட அற்புதமோ?
வெய்யில் அரசாங்கம் வாட்டிடினும்-இருள்
வேலிகட்டி யிங்கு வைத்திடினும்
பொய்யில் தொழிலாளர் எண்ணமெலாம்-அங்குப்
பொங்கிக் குமுறி இறைத்தனவோ?
"கவிமலர்" 1946
|