கலைஞர் பால் கருணை
காட்டுக?
தமிழ்நாட்டுப் பெருமக்கள் இன்பம் வந்து
தழுவுகிற நேரத்தில் தணலில் வீழ்ந்த
அமைவில்லா நிலைஒன்றை நாம்அ டைந்தோம்!
ஆம்அதனைச் சொல்லவெனில் என்ற னுள்ளம்
அமைதியினை இழந்துவிடும்! கண்களி னில்நீர்
அருவியென வேபெருகும்! மெய்து டிக்கும்!
இமைக்குள்ளே நமக்குற்ற பெருமை யெல்லாம்
இழப்பதெனில் உறுந்துயருக் கெல்லை யுண்டோ?
எத்துறையைப் பார்க்கினுமே தமிழ்நாட் டார்கள்
இழிவுற்றுக் கிடப்பதனைக் கண்டு கண்டு
சித்தந்தான் சோர்கையிலே “படக்க லைக்கும்”
சிறப்புற்ற இசைக்கும்நல் நகைச்சு வைக்கும்
மெய்த்திறமை கொண்டஇரு தமிழ ருள்ளார்
மேதினியும் அவர்புகழை அறியும்” என்ற
புத்தொளியும் புதுமணமும் பரவுங் காலைப்
பகையிருள்தான் பரவியதால் திகைத்து விட்டேன்!
கொடைதந்தான் நகைச்சுவையைக் கூட்டித் தந்தான்
கொள்கைநல மேதந்தான்; உணர்வெ ழுப்பும்
படைதந்தான்: பகுத்தறிவின் படத்தைத் தந்தான்!
பைந்தமிழர் அகத்தெல்லாம் செந்தமிழ்ச் சொல்
நடைதந்தான்; ‘மதுரத்’தின் நடிப்புத் தந்தான்!
நாட்டிலுள குடும்பங்கள் கேள்விக் கெல்லாம்
விடைதந்தான் விளக்கந்தான் தந்தான் எங்கள்
வியன்கலைஞன்! ஆம்அவனே என்எஸ் கிருஷ்ணன்!
|