7.தமிழுள்ள மட்டும்...
-வெண்பா
தேனெல்லாம் பாட்டாகச் செய்தவனே இன்றெங்கள்
ஊனெல்லாம் உள்ளுருகி ஓலமிட்டு - ஏனென்று
கேளாயோ? கிட்டரிய உன்பாட்டின் வண்ணமெல்லாம்
வாளாய் அறுக்குதே வந்து!
கண்ணப்பன் கிளிகள் கதறித் துடித்ததுபோல்
எண்ணற்றோர் ஏங்கி இளைத்தாலும் - கண்ணருவி
மாற்றும் கவிதைகளை வாரி வழங்கி எமைத்
தேற்ற வருவாயோ செப்பு?
ஏழைகள் வாழ்வதற்கே எத்தனையோ பாட்டிசைத்தாய்
வாழும் கனவுகளை வைத்திருந்தாய் - ஆழக்
குழிபுகவே உன்னைக் கொடுத்துவிட்டோம்; நாட்டில்
பழிவந்து சேர்ந்ததே பாய்ந்து!
நீயிருந்த நாள்வரைக்கும் நின்னை அறியவில்லை
பூவுதிர்ந்த பின்னால் புலம்புகின்றோம்! - ஓய்வுகொண்ட
பின்வந்தே போற்றும் பெரும்பழக்கம் இந்நாட்டில்
உன்னுடன் நிற்குமோ ஓய்ந்து?
பாடிப் பறந்துவிட்டாய்; பார்க்க முடியவில்லை?
வாடிக் களைத்தபடி வாழ்ந்திருந்தாய்! - தேடிப்
படிக்கும் தமிழ்நெஞ்சம் படித்துப் படித்து
வடிக்கும் விழிநீர் வளர்த்து!
தமிழுள்ள மட்டும் தமிழ்ஒளியும் வாழ்வான்!
அமிழ்தக் கவிவெறுப்போர் யாரோ? - இமையால்
நற்கவிதை காப்பதற்கு நாடே திரண்டு வந்தால்
பொற்காலம் தோன்றும் பொலிந்து!
-கவிஞர் ஆலந்தூர்
கோ.மோகனரங்கன்
|