6. காலம்
கனிய கனிந்த கவி
ஞாலம் நமக்கென்றே
நம்பிக்கை யூட்டிடவே
காலம் கனிய கனிந்துவந்த மாக்கவிஞன்
எதுவும் எவர்க்கும் என்றென்றும் வேண்டுமெனும்
பொதுவுடைமைச் சிந்தனையில் போயழுந்தி மிக்குவந்தோன்!
பிற்பட்ட மக்கள் பெருவாழ்வில் பங்கேற்றான்
சிற்ப நலத்தையெலாம் செந்தமிழில் காட்டியவன்!
பூவாய் மணக்கும் புதியதமிழ்ச் சொல்லெடுத்தே
நாவாரப் பாடி நலம்சேர்த்த விற்பன்னன்!
புதுநோக்கும் பொதுநோக்கும் பொலியும் நலத்தினிலே
முதுநோக்குத் திசைமாற்றி முன்னோக்குக் குரல்தந்தோன்
தன்னை விலையாக்கத் தயங்காத இவ்வுலகில்
பொன்னிமயம் போல்நிமிர்ந்தே பொதுவாழ்வில் ஓங்கியவன்
அலைபாயும் எண்ணங்கள் அத்தனையும் என்றுசொல
விலையில்லாக் காவியங்கள் விரைந்தெழுத முற்பட்டோன்
புத்தனவன் வாழ்வைப் புதுநூலாய் ஆக்கியதில்
முத்திரையை வைத்துள்ள முழுமைப் பெருங்கவிஞன்!
மாதவியாள் காவியத்தை மகிழ்ந்தளித்த வாணனவன்
காதலியால் துயரேந்திக் கடைநாளில் துன்புற்றே
பூதலத்து வாழ்வும் போதுமென்றே விடை கொண்டான்
சாதலிலாப் பாக்கள் சரித்திரத்தில் இடங் கொண்டான்!
புத்தணிகள் சூட்டிப் புனிதத் தமிழ்மகளின்
சித்தத்தில் வீற்றிருக்கும் சிரஞ்சீவிக் கவிராயன்
நாற்பதிலே தமிழ்ஒளிதான் நமைவிட்டே போனாலும்
ஆற்றலுடைத் தமிழ்போல அவன்நினைவும் வாழுமன்றோ!
-கவிஞர் இளங்கம்பன்
|