பக்கம் எண் :

108தமிழ்ஒளி கவிதைகள்2

எதிர்த்து நில்!

இந்தியை எதிர்த்து நில்!
எவர்வரின் எதிர்த்து நில்!
நந்திபோல் மறிக்கும் மூட
நாய்களை எதிர்த்து நில்!

வன்மையால் எதிர்த்து நில்!இவ்
வஞ்சகம் எதிர்த்துநில்!
தொன்மையான வாழ்வுகண்ட
சூரனே எதிர்த்துநில்!

நெஞ்சினால் எதிர்த்து நில்! உன்
நேர்மையால் எதிர்த்து நில்!
அஞ்சினால் அழிவதுண்மை!
ஆரடா! எதிர்த்து நில்!

உண்மையால் எதிர்த்து நில்!உன்
ஊரிலே எதிர்த்து நில்!
புண்மலிந்த ஈனவாழ்வைப்
போக்குவாய் எதிர்த்து நில்!

நேரிலே எதிர்த்து நில்!உன்
நீர்மையால் எதிர்த்து நில்!
போரிலே புறங் கொடாமுற்
போக்கினால் எதிர்த்து நில்!

‘தமிழர் நாடு’ - 1960