|
மாணவர்
எழுச்சி
என்சொல்வேன் அடடா!என்
ஆவி பற்றி
ஏறிவரும் உணர்ச்சியை, நன் மகிழ்ச்சி யைத்தான்!
பொன்போன்ற காலத்தைப் பொன்னாய்ச் செய்யும்
புகழ்வாய்ந்த மாணவர்கள் என்இ னத்தின்
நன்செய்யில் விளைந்திட்ட நற்ப யிர்கள்!
நாட்டுநிலை உணர்ந்திட்டார்! துடித்தெ ழுந்தார்!
கொன்றுகுவிப் போம்இழிவை எனச்சூள் செய்தே
கூடிவிட்டார் ஒன்றாய்!நான் கண்டு விட்டேன்!
பொங்குகின்ற மகிழ்ச்சிக்கோர் எல்லை யில்லை!
பூரிப்பால் என்தோள்கள் உயர்ந்து விம்மும்!
எங்குளது பகை? எங்கே? எனஎன் கண்கள்
எட்டியதொ லைகடந்தும் எட்டிப் பார்க்கும்!
சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து விட்டால்
சிறுநரிகள் சூழ்ச்சி எதும் செய்தல் இல்லை!
இங்கந்த நிலைகண்டேன் திராவி டத்தின்
எதிர்காலம் அதோ! அவர்கள் கையில் தானே!
புறமுதுகு காட்டாப்போர் மறவர் என்ற
புதுமலர்கள் அதோ, பாரீர்! வாழ்த்துக் கூறீர்!
திறமில்லார் யாமோ?என் றதட்டும் அந்தச்
சேய்கள்முன் பகைவர்வாய் திறக்க வில்லை!
பிறநாட்டார் “எமைப்பேண் நாட்டார்” என்னும்
பெரும்பழிக்கு வகைதேடும் ஆரி யத்தை
அறவேஇந் நாள்அதுவும் இன்றே பாய்ந்தே
அழித்திடுவோம்! ஆம்!இதிலே ஐய மில்லை!
செழுந்தேனை யொத்ததமிழ் உணர்ச்சி யாலே
திறல்பெற்றார் மாணவர்கள்! திராவி டத்தின்
முழுப்பொறுப்பும் அவர்ஏற்றுக் கொண்டார்! போரின்
முன்னணியை வன்மையுற அமைத்து விட்டார்!
எழில்வாய்ந்த பருவத்தார் தூய்மை மிக்கார்
எழுச்சிதனை யுற்றார்!பின் இந்த நாட்டில்
அழுந்தமிழர் துயர்தீர்வார்! அவரை இன்பம்
அண்டிவிடும்! தண்டமிழ்த்தாய் சிறப்பாள் நன்றே!
‘குடியரசு’ - 1944
|