|
தமிழனே கேள்!
தமிழனே நான்உலகின்
சொந்தக் காரன்
தனிமுறையில் நான்உனக்குப் புதிய சொத்து!
அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்
அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்!
இமை திறந்து பார்! விழியை அகல மாக்கு!
என்கவிதைப் பிரகடனம் உலக மெங்கும்
திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்!
சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வாநீ!
காக்கையென ஒற்றுமையாய்ச் சேர்ந்து நிற்போம்
கடிநாயின் வேற்றுமைகள் அகல வைப்போம்
பூக்காத இளமலரா யிருந்த காலம்
போயிற்று! பருவத்தால் மலர்ந்து விட்டோம்!
தேக்கிலை போல் காதுடைய யானைக் கூட்டத்
திரள் போன்று புறப்படுவோம்! புரட்சி நாளின்
ஆக்கத்தில் நமக்கின்று பங்கு வேண்டும்
அல்லவெனில் நாமென்ன அடிமை நாயா?
சீனத்தில் இருபத்துக் கோடி மக்கள்
செய்கின்ற புரட்சிப்போர் நமக்கு நல்ல
ஞானத்தை அளிக்கின்ற நிகழ்ச்சி யாகும்!
நமதருகில் தெலிங்கான வீர மக்கள்
கானத்து விலங்கனைய ‘நைஜாம்’ தன்னைக்
கருவறுக்க எழுந்ததுவும்
நமது நாட்டின்
ஈனநிலை ஒழிந்துவிட நமக்குத் திட்டம்
இதுவென்று காட்டுகிற புதிய ஜோதி!
பாரதியின் புதியயுகம் உலக மெங்கும்
பாட்டாளித் தோழர்களின் முயற்சி யாலே
காரகன்ற வானத்து மதியைப் போலே
கண்குளிர எழுகின்ற இந்த நாளில்
வேரற்ற மரம்போன்ற ஊச லாட்ட
வெறும் வாழ்வை வெறுத்துவிடு - வாளையேந்து!
சீரற்ற சமுதாயம் எதற்கு? - வாழ்வின்
சிறுமைகளை நொறுக்குவதில் தயங்க வேண்டாம்!
|