|
‘மீண்டும் அவன் அளந்துவிடில் நமக்குப்
பஞ்சம்மிடி, வருத்தம் பசியாவும் மேலும் தாக்கும்
மாண்டுவிடும் நிலைமை வரும்’ என்ற எண்ணம்
மலைபோலக் கிழவன்முன் உயர்ந்து நிற்கும்!
கண்திறந்த கடவுள் தனைச் சான்றுக்காக
கைகாட்டிக் கிழவனுமே அழைக்கும்போது,
விண்பிளந்து வைகுந்தம் காட்டி நின்று
வேதாந்தம் போதித்தார் கடவுள் தானே!
ஊன்றுகோல் தனைவீசி யெறிந்தான் விண்ணில்
உடைந்துவிழ வைகுண்டம், கடவுள் சாக
மீன்களெலாம் பொறிபோலச் சிதறியோட,
மேற்றிசையில் பந்தேபோல் கதிர் போய்
வீழ,
கிடுகிடுக்க அண்டமெலாம், தானியத்தைக்
கேட்கவந்த நிலப்பிரபு பாதாளத்தின்
ஒடுக்கத்தில் அடிபட்டு மறைந்து போக
உலகத்தை இடியோசைக் குலுக்கித் தள்ளும்!
ஊன்றுகோல் கைவிட்டு நழுவி வீழ
உயிர் நரம்பைப் பசியின்வாள் அறுத்துப்போட
ஈன்ற தாய் தந்தையரும் தன்முன்னோரும்
இடர்ப் பட்டு வீழ்ந்திட்ட இருளில் வீழ்ந்தான்!
நடந்த வழி மாளவில்லை; மாண்டு விட்டான்!
நடக்க இனி அவனுக்குக் கவலை யில்லை!
கிடந்த பிணம் அனாதையா, எனக் கேட்டார்கள்
கேள்விக்குப் பதில் சொல்லக் கிழவன் எங்கே?
‘முன்னணி’ - 1949
|