|
தோள்தட்டி
எழுவீரே!
தோள் தட்டியே எழுவீரே - பழந்
தொல்லை யழிந்திடவே, உழைப்போரே!
வாள் எயிற்றுக் கொடும்வேங்கை-பசி
வந்தஅக் காலையிற் சீறுதல்போலே!
யாருக்கிந்தப்புவி சொந்தம்?- பொருள்
அத்தனையு மிங்குச் சேர்த்தவர் நீரே!
ஊருக் குழைத் திளைத்தீரே உம்
உண்மை நிலையை யுணர்ந்திடுவீரே?
ஆழ்கடல், மடு, குன்றம் - வனம்
அத்தனையும் உங்கள் சக்தியறியும்!
தாழக்கிடப்பது மேனோ? உங்கள்
சந்ததி வாழ வழி வகுப்பீரே!
உழுது விதைத் தறுத்தீரே - பசி
யுற்றுத் தெருப்பிச்சை வாங்கச் சென்றீரே!
அழுது தொழுது கேட்டீரே - தயை
யாரிங்குக் காட்டினர்
கேட்டிடுவீரே!
ஓலைக் குடிசையின் மூலை - தனில்
ஓய்ந்து கிடந்திடும் ஓட்டைகொள் ஏரும்
காலைப் பின்னும் கிழமாடும் உங்கள்
கஷ்டம் சொல்லாதோ விழித்திடுவீரே!
சோறு கொழித்திடும் நாடு - தமிழ்ச்
சோழரின் நாடென வையகஞ் சொல்ல
ஆறு மடுப்புனல் தேக்கிப் - பயிர்
ஆக்கிக் கழனிமுப் போகஞ் செய்தீரே!
காலமெலாம் உழைத்தீரே - வானம்
காய்ந்திட்ட போதும் வியர்வையை ஊற்றி
ஞாலம் செழித்திடச் செய்தீர் - என்ன
ஞாயம் நீங்களின்று சாவில் விழுந்தீர்?
|