பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 53

கடல்

ஆயிரம் திரைகள் ஆர்ப்பரிப் பிட்டுக்
கரையிடை மோதும் கடற்கரை தன்னில்
தண்கடல் வானில் விண்மீன் குளிக்கும்
மாலையில், காற்றில் ஆங்கமர்ந் திருந்தேன்!
நீர்மேல் குமிழிபோல், நீள்கடல் தன்னில்,
கப்பல் புறப்படக் காத்திருக் கின்றது!
வானிடை முகில்கள் வரிசையாய்ச் செல்லும்
காட்சிபோல் படகுகள் கடலில் மிதக்கும்!
படகுகள் மீது பரதவர், துன்ப
நிழல்களைப் போலே நின்றிருக் கின்றார்!
அவர்தம் துன்பமே அகழ்பெருங் கடலாம்!
அவர்தம் வாழ்க்கையே அலைவுறும் அலையாம்!
வயிற்றிற் காக மரணமும் ஏற்க
முனைந்துமீன் தேடும் ஏழைகள் கண்ணீர்
கடலில் உப்பாய்க் கரைந்திடு கின்றது;
கவலையே இருளாய்க் கவிந்திடு கின்றது!

இருள்எனுந் துயரே ஏழைகள் வாழ்வாம்!
அவர்தம் குரலாய் அவர்கண் ணீராய்
அவர்தம் இதயத் தெழுந்திடும் குமுறலாய்க்
கதறிடும் கடலே! கதறிடும் கடலே!
உலகெலாம் கேட்க ஓலமிட் டிடுவாய்!

திரைகடல் ஓடித் திரவியம் தேடும்
செல்வர்தம் கப்பலில் சேர்ந்திடு பொன்பொருள்
யாருடைச் செல்வம்? யாருடைச் சொத்து?
கடலிடைப் பறக்கும் காகமாய் நாளும
்கையலுத் திடவே உழைத்திடும் ஏழை
ஊதலில் கூதலில் உயிர்துடிக் கின்றான்
அவன் உழைப்பாலே ஆகிய செல்வம்
கப்பலில் ஏறிக் கடலெலாம் தாண்டிச்
சென்றிடக் கண்டு தேம்பிநிற் கின்றான்!