|
வாழ்வின் ஒளிப்பறவை -
தன்
வண்ணச் சிறகுகளை
ஏழ்கடல், வான்வெளி, மண் - புவி
எங்கும் விரிக்குதடா!
கற்பனை மீறுதடா - இன்பக்
கனவும் வளருதடா!
பொற்புறு மாந்தரெலாம் - ஒரு
புத்துலகம் அமைப்பார்!
சாந்த உலகமதாம் - அது,
தன்னுடை வாசலிலே
ஏந்திப் பறக்கவிடும் - கொடி
இன்பச் சமாதானமாம்!
அந்தக் கொடிதனையே -
மக்கள்
யாவரும் ஏந்திடுவார்!
எந்தப் புயல்வரினும் - அதை
என்றைக்கும் காத்திடுவார்!
ரத்தக் கறைபடுத்தி - அதை
நாசம் புரிந்திடநீ
யுத்தம் தொடுக்க வந்தாய் - காலன்
உன்னைப் பிடிக்கவந்தான்!
போய்விடு போய்விடுநீ - ஹிட்லர்
போய்விட்ட பாழுலகம்!போய்விடு
போய்விடுநீ - உன்னைப்
பூமி உதறியது!
குழந்தை வளர்ந்திடுவான் -
அன்னை
குடும்பம் வளர்த்திடுவாள்!
பழகுதொழில் வளரும் - மக்கள்
பாரில் இனிதிருப்பார்!
|