|
‘சியாங்-கு’க்குப் பிரகடனம்!
எதிர்காலம் உன்விழியில் இருளாகிப் போச்சு;
இருக்கின்ற நிகழ்காலம் வெறுத்தொதுக்கலாச்சு!
அட்டியில்லை ‘சியாங்-கே’ உன் ஆவி குடிபோக
அங்கேபார் இறந்திட்ட காலம்எனும் வீடு!
ஏழைகளின் உயிர்பறிக்க எமனாகி வந்தாய்
இருந்தவரை உலகத்தில் கொலைகளவு செய்தாய்!
வாழையெனும் தொழிலாளர் குலையறுத்து வாழ்ந்தாய்!
வழிநெடுக பிணச்சாலை அமைத்து நடந்திட்டாய்!
பேழையிலே குவித்திட்டாய் பா தகங்கள் என்னும்
பேர்கொண்ட பெருஞ்செல்வம்; பாபமெனுங் காட்டுத்
தாழையிலே வாழ்ந்திட்ட நச்சரவே உன்றன்
தலைவிதியும் முடிந்ததும்நீ பாழ்வெளியிற் சேர்வாய்!
எத்தனை நாள் சீனர்களின் குடிகெடுத்தாய் மூடா!
எத்தனை நாள் அவர் குடிலை இருளடையச் செய்தாய்?
நித்தமும்நீ செய்தபழி கணக்குண்டோ, உண்டோ?
நிலமீதுன் கால்பட்ட இடமெல்லாம் நரகம்!
செத்தவர்கள் சென்றவழி அழைக்கிறது போவாய்!
சிலுவைகளின் குறியிட்ட கல்லறையும் உன்னை
முத்தமிட அழைக்கிறது; கழுகுவழி காட்ட
முடுகிவரும் சாப்பறையின் துணையோடு செல்வாய்!
நீசெய்த அக்கிரமம் நெடுந்தூக்கு மரமாய்
நிற்கிறதுன் முன்னிலையில் நிற்கிறது பாராய்;
அமெரிக்க டாலர் உனை ஆதரித்த தெல்லாம்
அழிவுக்கோ சாவுக்கோ அடமனிதப் பூண்டே!
தீவுக்கோ செல்கின்றாய் திருடியவன் போலே?
தேசபக்தி போயிற்றோ பணத்தோடு பணமாய்!
செஞ்சேனை வருகிறது தருமத்தைப் போலே
தீமையெலாம் பறக்கிறது உன்னுருவைப் போலே
சென்றவழி மீளாது, திரும்பாமல் ஓடு!
தீவினையுன் பின்தொடரச் சென்றிடுக நீயே!
‘முன்னணி’ - 1949
|