|
மாளிகை அமைப்போம்!
சந்திரனும் சூரியனும் காவல் செய்வார்
சரவிளக்காய் விண்மீன்கள் வெளிச்சம் காட்டும்
அந்தரமே மயங்கிவிழ மோக மூட்டி
அணிசெய்த வான்வில்லே வாச லாகும்
அந்தவொரு மாளிகையை அமைப்போம் வாரீர்!
ஆகாய மண்டலத்தில் அமைப்ப தல்ல
சுந்தரஞ்சேர் பெண்களுடன் அமுத முண்டு
சுகவாழ்வு பெறஇங்கே அமைப்போம் வாரீர்!
தாமரைபோல் வீற்றிருக்கும் இயற்கை யன்னை
தன்னெழிலை வானரங்கை தாய்நி லத்தை
தேமதுர மலர்ப்பொழிவை சாக ரத்தை
செகத்தினையே மாளிகையாய் அமைப்போம் வாரீர்!
சேமநிதி பதுமநிதி இரண்டும் சேர்ப்போம்!
திருநாளாய் வாழ்க்கையினை அமைப்போம் வாரீர்!
நாமங்கள் பலகோடி தரித்தோம் ஆனால்
நம்முருவம் ஒன்றதுவே உலக வீடு!
ஏணிவைத்தே சுவர்க்கமென்னு முலகம் செல்ல
எண்ணியவர் இறந்ததன்றி நடந்த தில்லை
ஆணியிட்டே கல்லறையில் அறைந்து விட்டோம்
அந்நினைவே மீளாது பிழைத்தி டாது!
மாணிக்க மாளிகையை அமைப்போம் இம்
மண்ணுலகே சுவர்க்கமெனச் செய்வோம்! மக்கள்
காணிக்கும், அரிசிக்கும், முழத்து ணிக்கும்
கையேந்தும் நரகத்தைத் தகர்ப்போம் வாரீர்!
வயல்களிலே மகிழ்ச்சிதனை விளைய வைப்போம்!
வைகைதனைக், காவிரியை, பொருநை தன்னை
மயலூட்டும் அமுதநீர்க் கடல்க ளாக
மாற்றிடுவோம் நமதுபுகழ் கோபுரத்தில்
புயலிடிகள் வீழாது தடுப்ப தற்கு
புத்தியெனும் விசைக்கருவி அமைப்போம், வாரீர்!
அயலொதுங்கி நிற்காதீர் விளைந்த பின்னர்
அறுத்திடலாம் என்றெண்ணித் தூங்கி டாதீர்!
|