|
வையகத்து மாளிகையில் பளிங்கு வாசல்!
வருகின்ற யாவரையும் வரவேற்போம், நாம்!
“கையகலம் என்வீடு; நானி ருக்கும்
காற்றில்லா அறையேஎன் உலகம்” என்ற
பொய்ப்புளுகு தரித்திரத்தைக் கழுகு தின்னப்
புதுஉலக மாளிகையை அமைப்போம் வாரீர்!
மெய்வாழும் பொதுவுடைமை நீதி வாழும்!
மிடியில்லை என்றகொடி பறக்கும் வீடு!
தெருக்களிலே சாக்கடையில், முடைநாற் றத்தில்
திரிகின்ற மனிதரெலாம் மணிப்பொன் வீட்டுக்
குருவிகளாய்த் தென்றலிலே மகிழ்ச்சி யோடு
குலவுதற்கு மாளிகையை அமைப்போம் வாரீர்!
தெருவெல்லாம் ஒளிவெள்ளம் நகர்க ளெல்லாம்
திசையளந்த வான்கதவம் திறந்தி ருக்கும்
‘வருக’ எனும் பொன்னெழுத்து வரிசை யேந்தும்
மாணிக்க மாளிகையை அமைப்போம் வாரீர்!
-1949
உதவி: கோ.பரமேஸ்வரன், மதுரை
|