பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 81

எதிரெதிரே

ஏழைகள் சிந்தும் வியர்வை, வரியென
       நீரெனப் பாய்கிறது - பணப்
பேழை யுடையவர் தம்சுக மாம், வயல்
       பச்சை கொழிக்கிறது!

ஊரில் உழைத்திடும் உத்தமர் நெஞ்சில்
       உதிரம் வடிகிறது - அதை
வாரிக் குடிக்கும் அரசிய லாரின்
       வயிறு பெருக்கிறது!

கொத்தும் சமூகக் கழுகுக ளின்கொடுங்
       கூக்குரல் கேட்கிறது - மதப்
பித்தர் அதைப் ‘பெருமாள்’ எனப் போற்றும்
       பிதற்றல் கேட்கிறது!

சுற்றும் உணர்ச்சிக் குதிரை குளம்படி
சுற்றிலும் கேட்கிறது - அதிற்
பற்றும் நெருப்புப் பொறிகளி னாற்புதுப்
பாதை தெரிகிறது!

கொட்டும் முரசொலி, திக்குக ளில்இடி
       கொட்டி நகைக்கிறது - பணப்
பெட்டி யருகில் இருந்த பிசாசுகள்
       பேந்த விழிக்கிறது!

வானத் தகட்டில் வரைந்தவிண் மீன்களில்
       வார்த்தை தெரிகிறது - புது
ஞானம் பெறும்கவி வாணர் குரலினில்
       நாதம் பிறக்கிறது!

‘அலை ஓசை! - 1954