பக்கம் எண் :

82தமிழ்ஒளி கவிதைகள்2

உரிமை முரசு

கட்டிய ஆடையிற் பட்ட அழுக்கைக்
கழுவி வெளுத்தோமே - பனி
சொட்டிய கார்இருள் மத்தியில் நின்று
துணியை வெளுத்தோமே!

ஒட்டும் வயிற்றில் உணவில்லை யாயினும்
ஊருக் குழைத்தோமே - இதை
எட்டுத் திசைகளில் கொட்டு முரசொலி
கொட்டி யுரைப்போமே!

பட்டினி லாடை வெளுத்தும் பரம்பரைப்
பஞ்சம் ஒடுங்கவில்லை - பலர்
கட்டும் பஞ்சாடை வெளுத்தும் தினந்தோறும்
கஷ்டம் அடங்கவில்லை!

‘கெட்டுக் கிடந்தது போதும்’ எனக்குரல்
கேட்டு விழித்தெழுந்தோம் - திசை
எட்டும் அதிர்ந்திடக் கொட்டிடும் பேரிகை
கொட்டி யுரைப்போமே!

‘சலவை மணி’ - 1955