பக்கம் எண் :

மலரும் உள்ளம்113

பள்ளிக் கூடம்செல்ல வழியனுப் பியவள்
    பார்த்து நிற்பாள்தலை மறையுமட்டும்.
பள்ளிக் கூடம்விட்டு வந்தது மேயவள்
    அள்ளியே வாரி அணைத்திடுவாள்.

மார்பி லணைத்தே மடியி லிருத்தி
    வட்டியில் சாதத்தை வைத்துக்கொண்டே,
“ஓர்வாய், ஓர்வாய், உண்டிடு வா” யென
    ஊட்டி நானுண்டிடக் கண்டிடுவாள்.

“ஆரிவர்?” என்றே வீட்டுக்கு வந்தோரை
    அன்னையும் காட்டியே கேட்டிடுவாள்.
நேரிய வழியில் கூறும் மழலையில்
    நினைவு மறந்து மகிழ்ந்திடுவாள்.

சித்திரக் காரன் எழுதும் படத்தினில்
    சிந்தனை யெல்லாம் செலுத்துதல்போல்,
அத்தனை கவனமும் அன்புட னென்மேல் 
    ஆர்வமாய் அன்னை செலுத்திடுவாள்.

அன்புடன் நம்மையே பேணி வளர்த்திடும்
    அன்னைசொல் தட்டாது கேட்டிடுவோம்.
என்றுமே அன்பினைக் காட்டிடும் அன்னையை
    ஏத்தித் தொழுதுநாம் போற்றிடுவோம்.