பக்கம் எண் :

112மலரும் உள்ளம்

அன்னையின் அன்பு

பத்துமா தங்கள் கஷ்டமிகப் பட்டுப்
    பாரினில் என்னையே கொண்டுவந்தாள்.
எத்தனை கஷ்டங்கள் நேர்ந்திடி னுமவள்
    என்றுமே இன்முகம் காட்டிடுவாள்.

அம்மா பக்கத்தில் தூங்கிடும் போதுநான்
    அழுது "ஓ" வெனக் கத்திடுவேன்.
"சும்மா தூங்கிடு, ஆராரோ" வெனச்
    சொல்லுவள் தாலாட்டு தூக்கமின்றி.

குழந்தை யெனக்கு நோயுமே வந்திடின்
    கொஞ்ச உணவேனும் கொள்ளமாட்டாள்.
பழகிய பாட்டிகள் வீட்டுக்கு வந்திடின்
    பக்குவ மெல்லாம் கேட்டறிவாள்.

மாந்தம்போ லேசில வியாதிகள் எனக்கு
    மாறி, மாறி வந்த காலமெல்லாம்.
சாந்தமாய் என்றன் பக்க மிருந்தவள்
    தக்க மருந்துகள் தந்திடுவாள்.