கன்றுக்குட்டி
கன்றே, கன்றே, ஓடிவா.
காளைக் கன்றே ஓடிவா.
இன்றே கூடி இருவரும்
இன்ப மாகப் பேசலாம்.
"அம்மா" என்றே நாங்களும்
அழைக்கி றோமே அன்னையை.
"அம்மா" என்று நீயுமே
அழைப்ப தெங்கள் பாடமோ ?
பாலைக் குடித்த பிறகுதான்
வேலை ஒன்றும் இல்லையே.
வாலைத் தூக்கி என்னிடம்
வளைந்து குதித்து ஓடிவா.
சொறிந்து கொடுத்து உனக்குநான்
சொன்னேன், ஏதோ
வார்த்தைகள்
"சரிதான், சரிதான்" என்றுநீ
தலையை ஆட்டிக் காட்டுவாய்.
|