பக்கம் எண் :

68மலரும் உள்ளம்

மனித வண்டி

மாடு இல்லை; குதிரை இல்லை;
       மனிதன் வண்டி இழுக்கிறான்.
பாடு பட்டு உடல் வளர்க்கப்
       பாவம், இதுபோல் செய்கிறான்.

மனிதன் மீது மனிதர் ஏறி
       மாப்பிள் ளைபோல் செல்கிறார்.
குனிந்து வண்டி இழுக்கும் அவனைக்
       குதிரை யாக நினைக்கிறார்!

மேடு பள்ளம் வந்த போது
       மாடு போல இழுக்கிறான்.
"ஓடு, ஓடு" என்று அவனை
       ஓட ஓட விரட்டுவார்.

சென்னைப் போன்ற பெரிய நகரத்
       தெருக்கள் தோறும் பார்க்கிறோம்.
இன்னும் இந்த மனித வண்டி
       இருப்ப தேனோ, ஏனோதான்!