பக்கம் எண் :

92மலரும் உள்ளம்

பாரதியார்

பாப்பாப் பாட்டைப் பாடித்தந்த
       பாரதி யாரைப் போற்றிடுவோம்.
கேட்போம், அவரது வார்த்தைகளை
       கேட்ட படியே நடந்திடுவோம்.

"குன்றெனத் தலைநிமிர்" என்றிடுவார்,
       "கொடுமை தொலைந்திட வேண்டு"மென்பார்.
"ஒன்றுபட் டாலே வாழ்வு" என்பார்.
       "உலகிலே யாவரும் ஒன்று" என்பார்.

"சண்டை சச்சரவை மூட்டிவிடும்
       சாதி ஒழிந்திட வேண்டும்" என்பார்.
பண்டைப் பெருமை வளர்ந்திடவே
       பற்பல உண்மைகள் கூறிடுவார்.

"பெண்ணுக் குரிமைகள் வேண்டு"மென்பார்.
       "பேச்சொடு செய்கையும் வேண்டு"மென்பார்.
கண்ணிற் சிறந்த விடுதலையைக்
       கண்டிட வழிதனைக் காட்டிவந்தார்.