பக்கம் எண் :

தேசிய கீதங்கள

தேசிய இயக்கப் பாடல்கள்

ஆங்கிலேயன் ஒரு தேசபக்தனுக்குக் கூறுவது


['நந்தன் சரித்திர'த்திலே ஆண்டை நந்தனுடைய சிதம்பர
வாஞ்சையை மற்றப் பறையர்கள் வந்து சொல்லக் கேட்டு மஹா
கோபங்கொண்டு நந்தனை நோக்கி, "சேரிமுற்றுஞ் சிவபக்தி
பண்ணும்படி விட்டையாம் அடியிட்டையாம்" என்பது
முதலான வார்த்தைகள் கூறிப் பயமுறுத்துகிறான். அதன்
குறிப்பைத் தழுவித் திருநெல்வேலி ஜில்லா கலெக்டராகிய
வின்ஸ், ஸ்ரீ சிதம்பரம்பிள்ளைக்குக் கூறியதாகப் பின்வரும்
கண்ணிகள் எழுதப்பட்டுள்ளன.  ('ஜன்ம பூமி' குறிப்பு)]

[ ராகம் -- தண்டகம்] [தாளம் -- ஆதி]

நாட்டிலெங்கும் சுவதந்திர வாஞ்சையை
  நாட்டினாய் -- கனல் -- மூட்டினாய்;
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
  மாட்டுவேன் -- வலி -- காட்டுவேன்
(நாட்டி) 1

கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
  கோஷித்தாய் -- எமைத் -- தூஷித்தாய்
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல
ஓட்டினாய் -- பொருள் -- ஈட்டினாய்.
(நாட்டி) 2

"கலெக்டர் வின்ஸ் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்"
என்பது `ஜன்ம பூமி' நூலில் உள்ள தலைப்பு.

கோழைப் பட்ட ஜனங்களுக் குண்மைகள்
  கூறினாய் -- சட்டம் -- மீறினாய்
ஏழைப்பட்டிங்கு இறத்தல் இழிவென்றே
  ஏசினாய் -- வீரம் -- பேசினாய்.
(நாட்டி) 3

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
  ஆக்கினாய் -- புன்மை -- போக்கினாய்
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
  மீட்டினாய் -- ஆசை -- ஊட்டினாய்.
(நாட்டி) 4

தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
  தூண்டினாய் -- புகழ் -- வேண்டினாய்
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள
  காட்டினாய் -- சோர்வை -- ஓட்டினாய்.
(நாட்டி) 5

எங்கும் இந்தசுயராஜ்ய விருப்பத்தை
  ஏவினாய் -- விதை -- தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
  செய்யவோ -- நீங்கள் -- உய்யவோ?(நாட்டி)
6

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
  சொல்லுவேன் -- குத்திக் -- கொல்லுவேன்
தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே
  தள்ளுவேன் -- பழி -- கொள்ளுவேன்.
(நாட்டி) 7