பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

பிற நாடுகள்

ஹரிகாம்போதி ஜன்யம்

[ராகம் -- ஸைந்தவி] [தாளம் -- திஸ்ரசாப்பு]


பல்லவி

கரும்புத் தோட்டத்திலே -- ஆ
கரும்புத் தோட்டத்திலே.

சரணங்கள்


கரும்புத் தோட்டத்திலே -- அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே -- ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்கு கின்றனரே -- அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்தி தற்கிலையோ -- செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார் அந்தக்
(கரும்புத் தோட்டத்திலே) 1

பெண்ணென்று சொல்லிடிலோ -- ஒரு
பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ -- அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ -- தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே அங்கொர்
கண்ணற்ற தீவினிலே -- தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் அந்தக்
(கரும்புத் தோட்டத்திலே) 2

நாட்டை நினைப்பாரோ -- எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ -- அவர்
விம்மிவிம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப் பாய்காற்றே -- துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க அழுதசொல்
மீட்டும் உரையாயோ -- அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்
(கரும்புத் தோட்டத்திலே) 3

நெஞ்சம் குமுறுகிறார் -- கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் -- துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே -- அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ -- ஹே
வீர கராளி, சாமுண்டி காளி!
(கரும்புத் தோட்டத்திலே) 4

கிருஷ்ணன்மீது ஸ்துதி

வேத வானில் விளங்கி “அறஞ்செய்மின்,
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்.
தீத கற்றுமின்” என்று திசையெலாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே
1

உண்ணுஞ் சாதிக் குறக்கமும் சாவுமே
நண்ணு றாவணம் நன்கு புரந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே
2

எங்க ளாரிய பூமியெனும் பயிர்
மங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்க முற்ற துணைமுகி லேமலர்ச்
செங்க ணாய்நின் பதமலர் சிந்திப்பாம்.
3

வீரர் தெய்வதம் கர்மவிளக்கு நற்
பார தர்செய் தவத்தின் பயனெனும்
தார விர்ந்த தடம்புயப் பார்த்தனோர்
கார ணம்மெனக் கொண்டு கடவுள் நீ
4

நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே
மன்னு பாரத மாண்குலம் யாவிற்கும்
உன்னுங் காலை உயர்துணை யாகவே
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவாம்.
5

ஐய கேளினி யோர்சொல், அடியர்யாம்
உய்ய நின்மொழி பற்றி யொழுகியே
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால்,
6

ஒப்பி லாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும் இப்புவி யாட்சியும்
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால்
7

மற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்த்தருள்
கொற்றவா நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகலேம்.
8
நின்றன் மாமர பில்வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்
இன்றிங் கெம்மை யதம்புரி இல்லையேல்
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.
93. பல்சுவை : தன்வரலாறும் பிற பாடல்களும்

1. சுயசரிதை
2. பாரதி -- அறுபத்தாறு
3. புதிய ஆத்திசூடி
4. முரசு
5. பாப்பாப் பாட்டு
6. வாழ்த்துப் பாக்கள்

முன்னுரை

சுயசரிதை’ என்பது 1910ஆம் ஆண்டு நவம்பரில் முதன்முதலில்
அச்சிடப்பெற்றது. அதன் முகவுரையில் பாரதியார் பின்வருமாறு
எழுதியிருக்கிறார்:

‘இச் சிறிய செய்யுள் -- நூல் விநோதார்த்தமாக எழுதப்பட்டது.
ஒரு சில பாட்டுக்கள் இன்பமளிக்கக் கூடியவானாலும்
பதர் மிகுதியாகக் கலந்திருக்கக்கூடும். இதன் இயல்பு
தன்கூற்றெனப்படும். அதாவது, கதாநாயகன் தன்
சரிதையைத்தான் நேராகவே சொல்லும் நடை. இக்காவிய
முறை நவீனமானது. இஃது தமிழறிந்த நூலோர்கள்
அங்கீகரிக்கத் தக்கதுதானா என்றுபார்த்திடும் பொருட்டுச்
சிறிய நூலொன்றை முதலில் பதிப்பிடுகிறேன். இதனைப்
பதம்பார்த்து மேலோர் நன்றென்பாராயின் இவ்வழியிலே
வேறு பல வெளியாக்குவேன். அனுபவக் குறைவினாலும்
ஆற்றற் குறைவினாலும் நேரும்
பிழைகளைப் பொறுத்தருள் செய்க.’

-- சி. சுப்பிரமணிய பாரதியார