பக்கம் எண் :

பல்சுவை : தன்வரலாறும் பிற பாடல்களும்

சுயசரிதை

சீட்டுக்கவிகளும் ஓலைத்தூக்கும்

[ 1 ]

ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மகாராஜ
ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள்
சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி
எழுதும் சீட்டுக் கவிகள்

பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப்
  பழந்தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய, நீயிந் நாளின்
  அரசுவீற் றிருக்கின் றாயால்;
காரியங் கருதிநின்னைக்
  கவிஞர்தாங் காண வேண்டின்
நேரிலப் போதே யெய்தி
  வழிபட நினைகி லாயோ?1

விண்ணள வுயர்ந்த கீர்த்தி
  வெங்கடேசு ரெட்ட மன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பண்,
  பாவள வுயர்ந்த தென்பா.
எண்ணள வுயர்ந்த வெண்ணில்
  இரும்புகழ்க் கவிஞர் வந்தால்
அண்ணலே பரிசு கோடி
  அளித்திட விரைகி லாயோ?2

கல்வியே தொழிலாக் கொண்டாய்,
  கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி
  அதைவழி பட்டு நின்றாய்!
சொல்லிலே நிகரி லாத
  புலவர்நின் சூழ லுற்றால்
எல்லினைக் காணப் பாயும்
  இடபம் போல் முற்ப டாயோ?3

எட்டயபுரம்
1919 ஆம் வருடம் மேமாதம் 2தேதி -
சுப்பிரமணிய பாரதி

[ 2 ]

ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர
ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள்
சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி
எழுதும் ஓலைத் தூக்கு

ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல.
  சேகரன் ஸ்ரீராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
  டேசுரெட்ட சிங்கன் காண்க,
வாசமிகு துழாய்த் தாரன் கண்ணனடி
  மறவாத மனத்தான், சக்தி
தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமண்ய
  பாரதிதான் சமைத்த தூக்கு .1

மன்னவனே! தமிழ்நாட்டில் தமிழறிந்த
  மன்னரிலை யென்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
  புனைந்தபொழு திருந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு,
  சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள் போல்
  தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே!2

பு{ ‘பாட்டு’ என்ற பாடமும் உண்டு.}


புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
  தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
  வசையென்னாற் கழிந்த தன்றே!
“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது,
  சொற்புதிது, சோதி மிக்க
நவகவிதை, எந்நாளும் அழியாத
  மகாகவிதை” என்று நன்கு3

பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
  புலவோரும் பிறரு மாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
  தாமுமிக வியந்து கூறிப்
பராவி யென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
  போற்றுகின்றார்; பாரோ ரேத்துந்
தராதிபனே, இளசை வெங்க டேசுரெட்டா!
  நின்பால் அத் தமிழ் கொணர்ந்தேன்.4

வேறு

வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
  கவிதையினை, வேந்தனே, நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட
  நீகேட்டு நன்கு போற்றி,
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்,
  பொற்பைகள், ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
  பல்லூழி வாழ்க நீயே!
5

எட்டயபுரம்
1919 ஆம் வருடம் மேமாதம் 2 தேதி -
சுப்பிரமணிய பாரதி

பு{[குறிப்பு]: [ஸ்ரீ பாரதியார் புதுவையிலிருந்து வெளியேறிய பிறகு, எட்டயபுரத்தில் சிறிது லம் வசித்து வந்தார். ஜீவனத்திற்கு மிகவும்கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம்.இருந்தாலும் ஜமீந்தாரை நேரில் கண்டு, அவரது ஆதரவைப் பெறுவதற்கு விரும்பவில்லை. ஏனெனில், ஏற்கனவே இந்தசமஸ்தானச் சேவகத்தை உதறிவிட்டு வெளியேறியவர். மேலும், கவர்ன்மெண்டாரால் பாரதிக்கு
ஏற்பட்டிருந்த தடைகளெல்லாம் இப்பொழுது நீங்கப்பட்டிருந்த போதிலும், பாரதியாருக்கு உதவி செய்தால் தனக்கு ஏதேனும் பாதகமேற்படுமோவென்று ஜமீந்தார் பயங்கொண்டிருந்தார். ஆதலின், பாரதியார் தனக்கு இச்சமயம் சரியான ஆதரவும்
மரியாதையும கிடைக்காது என்று கருதி, வறுமையின் கொடுமையைப் பொறுத்துக்கொண்டிருந்தாரே யொழிய, ஜமீந்தாரின் உதவியை நாட வில்லை. ஆனால், இவர் படும் கஷ்டத்தைச் சகிக்காமல் இவரது நண்பர்களும் பந்துக்களும் இவரை மிகவும் நிர்ப்பந்திக்கவே, ந்தாருக்கு இவ்விரண்டு சீட்டுக் கவிகளையும் எழுதியனுப்பினார்.
பன்னிரண்டு ரூபாய்க்குச் சேவகஞ் செய்துவந்த பழைய “சுப்பையா” வாகத் தன்னைக் கருதாமல் கவியரசனைப் புவியரசன் தக்கபடி ஆதரிக்கவேண்டு மென்பதை இந்தப் பாக்கள் நன்கு விளக்குகின்றன.
-- பாரதி பிரசுராலயத்தினர் குறிப்பு.]}