பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

துரியோதனன் பொறாமை

வேறு

எண்ணி லாத பொருளின் குவையும்
யாங்கணுஞ் செலுஞ் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர்
வார் கடற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தாட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்.
19

வேறு

‘பாண்டவர் முடியுயர்த்தே -- இந்தப்
பார்மிசை யுலவிடு நாள்வரை, நான்
ஆண்டதொர் அரசா மோ? -- எனது
ஆண்மையும் புகழுமொர் பொருளா மோ?
காண்டகு வில்லுடை யோன் -- அந்தக்
காளை யருச்சுனன் கண்களிலும்
மாண்டகு திறல்வீ மன் -- தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துள தே!
20

‘பாரத நாட்டிலுள்ள -- முடிப்
பார்த்திவர் யார்க்கு மொர் பதியென்றே
நாரதன் முதன்முனிவோர் -- வந்து
நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய் தான்;
சோரனவ் வெதுகுலத் தான் -- சொலும்
சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலி யும்
வீரமி லாத்தரு மன் -- தனை
வேந்தர்தம் முதலென விதித்தன வே.
21


‘ஆயிரம் முடிவேந் தர் -- பதி
னாயிர மாயிரங் குறுநிலத் தார்
மாயிருந் திறைகொணர்ந் தே -- அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திட வோ?
தூயிழை யாடைக ளும் -- மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படு மோ?
சேயிழை மடவா ரும் -- பரித்
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகை யோ?
22

‘ஆணிப்பொற் கலசங்க ளும் -- ரவி
யன்னநல் வயிரத்தின் மகுடங்க ளும்
மாணிக்கக் குவியல்க ளும் -- பச்சை
மரகதத் திரளும் நன் முத்துக்க ளும்
பூணிட்ட திருமணி தாம் -- பல
புதுப்புது வகைகளிற் பொலிவன வும்
காணிக்கை யாக்கொணர்ந் தார்; -- அந்தக்
காட்சியை மறப்பதும் எளிதா மோ?
23

பு{[மு-ப.]: ‘வில்லுடையோன் -- ஒருக்’
‘முதலென மிலைந்தனவே’}

‘நால்வகைப் பசும்பொன் னும் -- ஒரு
நாலா யிரவகைப் பணக்குவை யும்
வேல்வகை வில்வகையும் -- அம்பு
விதங்களும் தூணியும் வாள்வகையும்
சூல்வகை தடிவகையும் -- பல
தொனிசெயும் பறைகளும் கொணர்ந்துவைத் தே,
பால்வளர் மன்னவர் தாம் -- அங்குப்
பணிந்ததை என்னுளம் மறந்திடு மோ?
24

‘கிழவியர் தபசியர் போல் -- பழங்
கிளிக்கதை படிப்பவன், பொறுமையென் றும்
பழவினை முடிவென் றும் -- சொலிப்
பதுங்கி நிற்போன், மறத் தன்மையி லான்,
வழவழத் தருமனுக் கோ -- இந்த
மாநில மன்னவர் தலைமைதந் தார்?
முழவினைக் கொடிகொண் டான் -- புவி
முழுதையுந் தனியே குடிகொண் டான்.
25

‘தம்பியர் தோள்வலி யால் -- இவன்
சக்கர வர்த்தியென் றுயர்ந்தது வும்,
வெம்பிடு மதகரி யான் -- புகழ்
வேள்விசெய் தந்நிலை முழக்கிய தும்,
அம்புவி மன்னரெ லாம் -- இவன்
ஆணைதம் சிரத்தினில் அணிந்தவ ராய்
நம்பரும் பெருஞ்செல் வம் -- இவன்
நலங்கிளர் சபையினில் பொழிந்தது வும்
26

‘எப்படிப் பொறுத்திடு வேன்? -- இவன்
இளமையின் வளமைகள் அறியே னோ?
குப்பை கொலோமுத்தும்? -- அந்தக்
குரைகடல் நிலத்தவர் கொணர்ந்துபெய் தார்;
சிப்பியும் பவளங்க ளும் -- ஒளி்
திரண்டவெண் சங்கத்தின் குவியல்க ளும்
ஒப்பில்வை டூரியமும் -- கொடுத்து
ஒதுங்கிநின்றார் இவன் ஒருவனுக் கே.
27

பு{[மு-ப.]: செய் தப்பத முழக்கியதும்.}

‘மலைநா டுடையமன் னர் -- பல
மான்கொணர்ந் தார், புதுத் தேன்கொணர்ந் தார்,
கொலைநால் வாய்கொணர்ந் தார், -- மலைக்
குதிரையும் பன்றியும் கொணர்ந்துதந் தார்;
கலைமான் கொம்புக ளும் -- பெருங்
களிறுடைத் தந்தமும் கவரிக ளும்
விலையார் தோல்வகை யும் -- கொண்டு
மேலும்பொன் வைத்தங்கு வணங்கிநின் றார்.
28

‘செந்நிறத் தோல், கருந் தோல், -- அந்தத்
திருவளர் கதலியின் தோலுட னே
வெந்நிறப் புலித்தோல் கள், -- பல
வேழங்கள் ஆடுகள் இவற்றுடைத் தோல்,
பன்னிற மயிருடைகள், -- விலை
பகரரும் பறவைகள், விலங்கினங் கள்,
பொன்னிறப் பாஞ்சாலி -- மகிழ்
பூத்திடும் சந்தனம் அகில்வகை கள்,
29

‘ஏலங் கருப் பூரம் -- நறும்
இலவங்கம் பாக்குநற் சாதி வகை,
கோலம் பெறக்கொணர்ந்தே -- அவர்
கொட்டிநின்றார், கரம் கட்டிநின்றார்;
மேலுந் தலத்திலு ளார் -- பல
வேந்தர் அப் பாண்டவர் விழைந்திடவே
ஓலந் தரக்கொணர்ந்தே -- வைத்த
தொவ்வொன்றும் என்மனத் துறைந்தது வே.
30

‘மாலைகள் பொன்னும்முத் தும் -- மணி
வகைகளிற் புனைந்தவும் கொணர்ந்துபெய் தார்;
சேலைகள் நூறுவன் னம் -- பல
சித்திரத் தொழில்வகை சேர்ந்தன வாய்

பு{[மு-ப.]: தலத்திலுளார்}

சாலவும் பொன்னிழைத் தே -- தெய்வத்
தையலர் விழைவன பலர்கொணர்ந் தார்;
கோலநற் பட்டுக்க ளின் -- வகை
கூறுவதோ? எண்ணில் ஏறுவ தோ?
31

‘கழல்களும் கடகங்க ளும் -- மணிக்
கவசமும் மகுடமும் கணக்கில வாம்;
நிழல் நிறப் பரிபல வும் -- செந்
நிறத்தன பலவும்வெண் ணிறம்பல வும்
தழல் நிறம் மேகநிறம் -- விண்ணில்
சாரும் இந்திரவில்லை நேரு நிறம்
அழகிய கிளிவயிற்றின் -- வண்ணம்
ஆர்ந்தன வாய்ப்பணி சேர்ந்தன வாய்
32

‘காற்றெனச் செல்வன வாய், -- இவை
கடிதுகைத் திடுந்திறன் மறவரொடே,
போற்றிய கையின ராய்ப் -- பல
புரவலர் கொணர்ந்து அவன் சபைபுகுந் தார்.
சீற்றவன் போர்யானை -- மன்னர்
சேர்த்தவை பலபல மந்தையுண்டாம்;
ஆற்றல் மிலேச்சமன் னர் -- தொலை
அரபியர் ஒட்டைகள் கொணர்ந்துதந் தார்.
33

‘தென்றிசைச் சாவக மாம் -- பெருந்
தீவுதொட்டேவட திசையத னில்
நின்றிடும் புகழ்ச்சீ னம் -- வரை
நேர்ந்திடும் பலபல நாட்டின ரும்,
வென்றிகொள் தருமனுக் கே, -- அவன்
வேள்வியில் பெரும்புகழ் விளையும்வண்ணம்,
நன்றுபல் (பொருள்) கொணர்ந் தார்; -- புவி
நாயகன் யுதிட்டிரன் எனவுணர்ந் தார்.
34

‘ஆடுகள் சிலர்கொணர்ந் தார்; -- பலர்
ஆயிர மாயிரம் பசுக்கொணர்ந் தார்;
மாடுகள் பூட்டின வாய்ப் -- பல
வகைப்படு தானியம் சுமந்தன வாய்

பு{[குறிப்பு]: ‘பொருள்’ என்ற சொல் ஊகித்துக் கொண்டது}

ஈடுறு வண்டிகொண்டே -- பலர்
எய்தினர்; கரும்புகள் பலர்கொணர்ந்தார்;
நாடுறு தயிலவகை -- நறு
நானத்தின் பொருள்பலர் கொணர்ந்துதந் தார்;
35

‘நெய்க்குடம் கொண்டுவந்தார், -- மறை
நியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுக் கே;
மொய்க்குமின் கள்வகைகள் -- கொண்டு
மோதினர் அரசினம் மகிழ்வுற வே;
தைக்குநற் குப்பாயம், -- செம்பொற்
சால்வைகள், போர்வைகள், கம்பளங் கள் --
கைக்குமட் டினுந்தா னோ -- அவை
காண்பவர் விழிகட்கும் அடங்குப வோ?
36

‘தந்தத்தில் கட்டில்க ளும், -- நல்ல
தந்தத்தில் பல்லக்கும், வாகன மும்,
தந்தத்தின் பிடிவா ளும், -- அந்தத்
தந்தத்திலே சிற்பத் தொழில்வகை யும்,
தந்தத்தி லாதன மும், -- பின்னும்
தமனிய மணிகளில் இவையனைத் தும்
தந்தத்தைக் கணக்கிட வோ? -- முழுத்
தரணியின் திருவும் இத் தருமனுக் கோ?’
37

வேறு

என்றிவ் வாறு பலபல எண்ணி
ஏழை யாகி இரங்குத லுற்றான்,
வன்றி றத்தொரு கல்லெனு நெஞ்சன்,
வானம் வீழினும் அஞ்சுத இல்லான்,
குன்றமொன்று குழைவுற் றிளகிக்
குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம்
கன்று பூதலத் துள்ளுறை வெம்மை
காய்ந்தெழுந்து வெளிப்படல் போல.
38

நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ
நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய்,
மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம்
வன்மை யாவும் மறந்தன னாகிப்
பஞ்சை யாமொரு பெண்மகள் போலும்
பாலர் போலும் பரிதவிப் பானாய்க்
கொஞ்ச நேரத்திற் பாதகத் தோடு
கூடியே உற வெய்திநின் றானால்.
39

யாது நேரினும் எவ்வகை யானும்
யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணிச்
செய்கை யொன்றறி யான்திகைப் பெய்திச்
சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட
துட்ட மாமனைத் தான்சர ணெய்தி,
‘ஏது செய்வம்’ எனச்சொல்லி நைந்தான்,
எண்ணத் துள்ளன யாவும் உரைத்தே.
40

மன்னர் மன்னன் யுதிட்டிரன் செய்த
மாம கத்தினில் வந்து பொழிந்த
சொன்னம் பூண்மணி முத்திவை கண்டும்
தோற்றங் கண்டும் மதிப்பினைக் கண்டும்
என்ன பட்டது தன்னுளம் என்றே
ஈன மாமன் அறிந்திடும் வண்ணம்
முன்னம் தான் நெஞ்சிற் கூறிய வெல்லாம்
மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான்.
41