பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


விதுரன் தூது செல்லுதல்

வேறு


அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்;
அடவிமலை ஆறெல்லாம் கடந்துபோகித்
திண்ணமுறு தடந்தோளும் உளமும் கொண்டு
திருமலியப் பாண்டவர்தாம் அரசு செய்யும்
வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான்
வழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி
எண்ணமுற லாகித்தன் இதயத்துள்ளே
இனையபல மொழிகூறி இரங்கு வானால்.
115

‘நீல முடிதரித்த பலமலைசேர் நாடு,
நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பும் நாடு,
கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங்
குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு,
ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப்
பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு
பண்ணவர் போல் மக்களெலாம் பயிலும்நாடு,
116

‘அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர
அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர்
கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும்
காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல்
பொன்னங்க மணிமடவார் மாட மீது
புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச,
வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ, மாதர்
மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு,
117

‘பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு,
பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரும்நாடு,
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
வேள்விஎனும் இவையெல்லாம் விளங்கு நாடு,
சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு,
தொல்லுலகின் முடிமணிபோல் தோன்று நாடு,
பாரதர்தந் நாட்டிலே நாச மெய்தப்
பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே!’
118