பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

விதுரனை வரவேற்றல்

வேறு


விதுரன் வருஞ்செய்தி தாஞ்செவி யுற்றே,
வீறுடை ஐவர் உளமகிழ் பூத்துச்
சதுரங்க சேனை யுடன்பல பரிசும்
தாளமும் மேளமும் தாங்கொண்டு சென்றே
எதிர்கொண் டழைத்து, மணிமுடி தாழ்த்தி,
ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி,
மதுர மொழியிற் குசலங்கள் பேசி,
மன்ன னொடுந்திரு மாளிகை சேர்ந்தார்.
119

குந்தி எனும்பெயர்த் தெய்வதந் தன்னைக்
கோமகன் கண்டு வணங்கிய பின்னர்,
வெந்திறல் கொண்ட துருபதன் செல்வம்
வெள்கித் தலைகுனிந் தாங்குவந் தெய்தி,
அந்தி மயங்க விசும்புடைத் தோன்றும்
ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை
மந்திரந் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண்
வைத்து வணங்கி வனப்புற நின்றாள்.
120

தங்கப் பதுமை எனவந்து நின்ற
தையலுக் கையன் நல் லாசிகள் கூறி
அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர்,
ஆங்குவந் துற்ற உறவினர் நண்பர்
சிங்க மெனத்திகழ் வீரர் புலவர்
சேவகர் யாரொடுஞ் செய்திகள் பேசிப்
பொங்கு திருவின் நகர்வலம் வந்து
போழ்து கழிந்திர வாகிய பின்னர்,
121