பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

தருமபுத்திரன் முடிவுரை

வேறு

வீமன் உரைத்தது போலவே -- உளம்
வெம்பி நெடுவில் விசயனும் -- அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே -- நின்ற
காளை இளைஞர் இருவரும் -- செய்ய
தாமரைக் கண்ணன் யுதிட்டிரன் -- சொல்லைத்
தட்டிப் பணிவொடு பேசினார்; -- தவ
நேமத் தவறலும் உண்டுகாண், -- நரர்
நெஞ்சம் கொதித்திடு போழ்திலே.
136

அன்பும் பணிவும் உருக்கொண்டோர் -- அணு
வாயினும் தன்சொல் வழாதவர் -- அங்கு
வன்பு மொழிசொலக் கேட்டனன்; -- அற
மன்னவன் புன்னகை பூத்தனன்: -- ‘அட!
முன்பு சுயோதனன் செய்ததும் -- இன்று
மூண்டிருக் குங்கொடுங் கோலமும் -- இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன்; என்னைப்
பித்தனென் றெண்ணி உரைத்திட்டீர்!
137

‘கைப்பிடி கொண்டு சுழற்றுவோன் -- தன்
கணக்கிற் சுழன்றிடும் சக்கரம்; -- அது
தப்பி மிகையுங் குறையுமாச் -- சுற்றும்
தன்மை அதற்குள தாகுமோ? -- இதை
ஒப்பிட லாகும் புவியின்மேல் -- என்றும்
உள்ள உயிர்களின் வாழ்விற்கே, -- ஒரு
செப்பிடு வித்தையைப் போலவே -- புவிச்
செய்திகள் தோன்றிடு மாயினும்,
138

‘இங்கிவை யாவுந் தவறிலா -- விதி
ஏற்று நடக்குஞ் செயல்களாம்; -- முடி
வெங்கணு மின்றி எவற்றினும் -- என்றும்
ஏறி இடையின்றிச் செல்வதாம் -- ஒரு
சங்கிலி யொக்கும் விதிகண்டீர்! -- வெறுஞ்
சாத்திர மன்றிது சத்தியம்; -- நின்று
மங்கியொர் நாளில் அழிவதாம் -- நங்கள்
வாழ்க்கை இதனைக் கடந்ததோ?
139

‘தோன்றி அழிவது வாழ்க்கைதான்; -- இங்குத்
துன்பத்தொ டின்பம் வெறுமையாம் -- இவை
மூன்றில் எதுவரு மாயினும், -- களி
மூழ்கி நடத்தல் முறைகண்டீர்! -- நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ, -- துன்பம்
உற்றிடு மென்பதொர் அச்சத்தால்? -- விதி
போன்று நடக்கும் லகென் றே -- கடன்
போற்றி யொழுகுவர் சான்றவர்.
140

‘சேற்றிம் உழலும் புழுவிற்கும், -- புவிச்
செல்வ முடைய அரசர்க்கும், -- பிச்சை
ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும், -- உயிரை
எத்தனை உண்டவை யாவிற்கும், -- நித்தம்
ஆற்றுதற் குள்ள கடமைதான் -- முன் வந்து
தவ்வக் கணந்தொறும் நிற்குமால்; -- அது
தோற்றும் பொழுதிற் புரிகுவார் -- பல
சூழ்ந்து கடமை அழிப்பரோ?
141

‘யாவருக் கும்பொது வாயினும் -- சிறப்
பென்பர் அரசர் குலத்திற்கே -- உயர்
தேவரை யொப்பமுன்னோர்தமைத் -- தங்கள்
சிந்தையிற் கொண்டு பணிகுதல்; -- தந்தை
ஏவலை மைந்தர் புரிதற்கே -- வில்
இராமன் கதையையும் காட்டினேன்; -- புவிக்
காவலர் தம்மிற் சிறந்தநீர் -- இன்று
கர்மம் பிழைத்திடு வீர்கொலோ?’
142