பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


பாண்டவர் பயணமாதல்

ஆங்கதன்பின் மூன்றாம்நாள் இளைஞ ரோடும்
அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும்
பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும்
படையினொடும் இசையினொடும் பயண மாகித்
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
திருநகர்விட் டகல்கின்றான் தீயோர் ஊர்க்கே!
நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ,
நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே?
145

நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவிவிழும், சிற்றெறும்பால் யானை சாகும்,
வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்,
வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்,
கிரிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்,
கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்கு மேற்காம்,
புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவர், விதிவகுத்த போழ்தி னன்றே.
146