பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

மாலை வர்ணனை

மாலைப்போ தாதலுமே, மன்னன் சேனை
வழியிடைஓர் பூம்பொழிலின் அமர்ந்த காலை,
சேலைப்போல் விழியாளைப் பார்த்தன் கொண்டு
சென்றாங்கோர் தனியிடத்தே பசும்புல் மேட்டில்
மேலைப்போம் பரிதியினைத் தொழுது கண்டான்;
மெல்லியலும் அவன்தொடைமேல் மெல்லச் சாய்ந்து
பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கிப்
பார்த்தனும்அப் பரிதிஎழில் விளக்கு கின்றான்
147

‘பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாய் தோன்றுங் காட்சி;
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற வல்லார்?
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.
148

‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.
149

‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்;
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே,
மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.
150

"‘அமைதியொடு பார்த்திடுவாய், மின்னே, பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே,
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்;
தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமைகவிதை செய்கின்றாள், எழுந்துநின்றே
உரைத்திடுவோம், “பல்லாண்டு வாழ்க” என்றே.
151

வேறு

‘பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
என்னடி இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! -- செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்! -- வெம்மைதோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! -- பாரடி!
நீலப் பொய்கைகள்! -- அடடா, நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! -- கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ் சிகரங்கள்! -- காணடி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்! -- ஆஹா! எங்குநோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’
152

வேறு


‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத்
    தேர்கின்றோம்-- அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக’
    என்பதோர் -- நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு
    வாழ்த்தியே -- இவர்
தங்க ளினங்க ளிருந்த பொழிலிடைச்
    சார்ந்தனர்; -- பின்னர்
அங்கவ் விரவு கழிந்திட, வைகறை
    யாதலும், -- மன்னர்
பொங்கு கடலொத்த சேனைகளோடு
    புறப்பட்டே, -- வழி
எங்குந் திகழும் இயற்கையின் காட்சியி  
    லின்புற்றே, -- கதிர்
மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை
    வந்துற்றார்.
153