பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

 

பாண்டவர் வரவேற்பு

அத்தின மாநக ரத்தினில் வந்தனர்
ஆரியப் பாண்டவர் என்றது கேட்டலும்,
தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள்;
சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் --
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்;
இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர
இத்தின மட்டும் எனவியப் பெய்துற
எள்ளும் விழற்கிட மின்றி யிருந்தார்.
155

மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர்;
வன்தடந் தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர்;
வெந்திறல் யானையும் தேரும் குதிரையும்
வீதிகள் தோறும் ஒலிமிகச் செய்தன;

பு{[மு-ப.]: ‘எங்களறிவு விளக்க முறச் செய்திடவே -- என’}

வந்தியர் பாடினர், வேசையர் ஆடினர்;
வாத்தியங் கோடி வகையின் ஒலித்தன;
செந்திரு வாழும் நகரினில் அத்தினஞ்
சேர்ந்த ஒலியைச் சிறிதென லாமோ!
156

வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறிஅம்
மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நாலிய லாம்படை யோடு நகரிடை
நல்ல பவனி எழுந்த பொழுதினில்
சேலியல் கண்ணியர் பொன்விளக் கேந்திடச்
சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திடக்
கோலிய பூமழை பெய்திடத் தோரணம்
கொஞ்ச, நகரெழில் கூடிய தன்றே.
157

வேறு


மன்னவன் கோயிலிலே -- இவர்
வந்து புகுந்தனர் வரிசையொடே.
பொன்னரங் கினிலிருந்தான் -- கண்ணில்
புலவனைப் போய்நின்று போற்றியபின்,
அன்னவன் ஆசிகொண்டே -- உயர்
ஆரிய வீட்டுமன் அடிவணங்கி,
வின்னய முணர்கிருபன் -- புகழ்
வீரத் துரோணன் அங்கவன்புதல்வன்
158

மற்றுள பெரியோர்கள் -- தமை
வாழ்த்திஉள்ளன்பொடு வணங்கிநின்றார்;
கொற்றமிக் குயர்கன்னன் -- பணிக்
கொடியோன் இளையவர் சகுனியொடும்
பொற்றடந் தோள்சருவப் -- பெரும்
புகழினர் தழுவினர், மகிழ்ச்சிகொண்டார்;
நற்றவக் காந்தாரி -- முதல்
நாரியர் தமைமுறைப் படிதொழுதார்.
159

குந்தியும் இளங்கொடியும் -- வந்து
கூடிய மாதர்தம்மொடுகுலவி
முந்திய கதைகள்சொல்லி -- அன்பு
மூண்டுரை யாடிப்பின் பிரிந்துவிட்டார்;
அந்தியும் புகுந்ததுவால்; -- பின்னர்
ஐவரும் உடல்வலித் தொழில்முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ்செய் -- தங்கு
சாருமின் னுணவமு துண்டதன்பின்,
160

சந்தன மலர்புனைந்தே, -- இளந்
தையலர் வீணைகொண் டுயிருருக்கி
விந்தைகொள் பாட்டிசைப்ப -- அதை
விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார்;
வந்ததொர் துன்பத்தினை -- அங்கு
மடித்திட லன்றிப்பின் தருந்துயர்க்கே
சிந்தனை உழல்வாரோ? -- உளச்
சிதைவின்மை ஆரியர் சிறப்பன்றோ?
161