பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


பாண்டவர் சபைக்கு வருதல்

பாணர்கள் துதிகூற -- இளம்
பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்;
தோணலத் திணையில்லார் -- தெய்வந்
துதித்தனர்; செய்யபொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங் கள் -- பல
பூண்டுபொற் சபையிடைப் போந்தனரால்;
நாணமில் கவுரவரும் -- தங்கள்
நாயக னொடுமங்கு வீற்றிருந் தார்.
162

வீட்டுமன் தானிருந் தான்; -- அற
விதுரனும், பார்ப்பனக் குரவர்க ளும்,
நாட்டுமந் திரிமாரும், -- பிற
நாட்டினர் பலபல மன்னர்களும்,

பு{[மு-ப.]: ‘மந்திரி வகையும்’}

கேட்டினுக் கிரையாவான் -- மதி
கெடுந்துரி யோதனன் கிளையின ரும்,
மாட்டுறு நண்பர்களும் -- அந்த
வான்பெருஞ் சபையிடை வயங்கிநின்றார்.
163