பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


வீமனை இழத்தல்

கொக்கரித் தார்த்து முழங்கியே -- களி
கூடிச் சகுனியுஞ் சொல்லுவான்: -- ‘எட்டுத்
திக்கனைத்தும்வென்ற பார்த்தனை -- வென்று
தீர்த்தனம் வீமனைக் கூ’றென்றான். -- தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன், -- உளஞ்
சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில் -- எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன், -- அறத்
தண்ணல் இதனை உரைக்கின்றான்:
31

‘ஐவர் தமக்கொர் தலைவனை, -- எங்கள்
ஆட்சிக்கு வேர்வலி அஃதினை, -- ஒரு
தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும் -- நின்று
சீறி அடிக்குந் திறலனை, -- நெடுங்
கைவளர் யானை பலவற்றின் -- வலி
காட்டும் பெரும்புகழ் வீமனை, -- உங்கள்
பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் -- வென்று
போ!’ என் றுரைத்தனன் பொங்கியே.
32

போரினில் யானை விழக்கண்ட -- பல
பூதங்கள் நாய்நரி காகங்கள் -- புலை
ஒரி கழுகென் றிவையெலாம் -- தம
துள்ளங் களிகொண்டு விம்மல்போல், -- மிகச்
சீரிய வீமனைச் சூதினில் -- அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும் -- நின்று
மார்பிலுந் தோளிலுங் கொட்டினார் -- களி
மண்டிக் குதித்தெழுந் தாடுவார்.
33