பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

சகுனி சொல்வது

‘புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல் -- நின்னைப்
போன்றவர் செய்யத் தகுவதோ? -- இரு
கண்ணி லினியவ ராமென்றே -- இந்தக்
காளையர் தம்மைஇங் குந்தைதான் -- நெஞ்சில்
எண்ணி யிருப்ப தறிகுவாய்; -- இவர்
யார்? நின்றன் சோதர ரல்லரோ? -- களி
நண்ணித் தொடங்கிய சூதன்றோ? -- இவர்
நாணுறச் செய்வது நேர்மையோ?
36

‘இன்னும் பணயம்வைத் தாடுவோம்; -- வெற்றி
இன்னும் இவர்பெற லாகுங்காண்.
பொன்னுங் குடிகளுந் தேசமும் -- பெற்றுப்
பொற்பொடு போதற் கிடமுண்டாம்; -- ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள் -- இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால், அவள்
துன்னும் அதிட்ட முடையவள் -- இவர்
தோற்ற தனைத்தையும் மீட்டலாம்.’
37

என்றந்த மாமன் உரைப்பவே -- வளர்
இன்பம் மனத்தி லுடையனாய் -- ‘மிக
நன்றுநன்’றென்று சுயோதனன் -- சிறு
நாயொன்று தேன்கல சத்தினை -- எண்ணித்
துன்று முகவையில் வெற்றுநா -- வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல்போல் -- அவன்
ஒன்றுரை யாம லிருந்திட்டான் -- அழி
வுற்ற துலகத் தறமெலாம்.
38