பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


திரௌபதி சூதில் வசமானதுபற்றிக் கௌரவர்
கொண்ட மகிழ்ச்சி

திக்குக் குலுங்கிடவே -- எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்.
தக்குத்தக் கென்றேஅவர் -- குதித்தாடுவார்
தம்மிரு தோள்கொட்டுவார்.
ஒக்குந் தருமனுக்கே -- இஃதென்பர் ‘ஓ!
ஓ!’ வென் றிரைந்திடுவார்;
கக் கக்கென் றேநகைப்பார் -- ‘துரியோதனா,
கட்டிக்கொள் எம்மை’என்பார்.
43

மாமனைத் ‘தூக்கா’ யென்பார்; -- அந்த மாமன்மேல்
மாலை பலவீசுவார்.
‘சேமத் திரவியங்கள் -- பலநாடுகள்
சேர்ந்ததி லொன்றுமில்லை;
காமத் திரவியமாம் -- இந்தப்பெண்ணையும்
கைவச மாகச்செய்தான்;
மாமனொர் தெய்வ’மென்பார்; ‘துரியோதனன்
வாழ்க’வென் றார்த்திடுவார்.
44