பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

சூரிய தரிசனம்


[காலை வேளையில், கடற்கரையில், சூரியன் மேகங்களால்
மூடப்பட்டிருக்க, முகம் காட்டும்படி அவனை வேண்டிப்
பாடிய பாடல்கள்.]

[ராகம் -- பூபாளம்]


சுருதி யின்கண் முனிவரும் பின்னே
  தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
  பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்:
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
  பானுவே, பொன்செய் பேரொளித் திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
  கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
1


வேதம் பாடிய சோதியைக் கண்டு
  வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கடலின்னொலி யோடு
  நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
  கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆத வா, நினை வாழ்த்திட வந்தேன்
  அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
2