பக்கம் எண் :

தனிப் பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்

பல்வகைப் பாடல்கள்

தொழில்

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள்வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில்மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும்வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்.
பிரம தேவன் கலையிங்கு நீரே!
1

மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி
மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்;
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!
2

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக்
கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!
நாட்டி லேயறம் கூட்டி வைப்பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே;
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே!
3